தவசிப் பாறையின் மேல் இருந்த நவகிரகக் கற்களை வணங்கி விட்டு அதற்குச் சற்று கீழே இறங்கி ஏசி பாறையினுள் நுழைந்தோம் .ஆஹா அற்புதம் இயற்கையின் அழகான ரம்மியமான படைப்புகளில் இந்த ஏசி பாறையும் ஒன்று .
ஏசி பாறையிலிருந்துச் சதுரகிரி மலையின் அழகை பார்ப்பது சினிமாஸ்கோப்பில் படம் பார்ப்பது போல அவ்வளவு அழகாக இருக்கும் . ஏசி பாறையில் இருந்து தவறி விழுந்தால் எலும்பு கூடக் கிடைக்காது . அவ்வளவு ஆபத்தான இடமும் கூட.
ஏசி பாறையிலிருந்து மேலே ஏறி இடைக்காடர் வனம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம் . இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடைக்காடர் வனத்தை அடைந்தோம் . அதற்குள் பிரதீப் பிரபா, 'பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு நாம் மேலும் பயணத்தை தொடரலாமே' . என்று சொன்னார் . எனக்கும் அது சரி என்றே பட்டது காரணம் இடைக்காடர் வனத்தில் குரங்குகள் தொல்லை இல்லை . இங்கு சாப்பிட்டால் கொஞ்சம் சிரமம் இல்லாமல் இருக்கும் . என்று நினைத்து சரி என்றேன் . ஆனால் வழிகாட்டி பாலுவோ, ' பிரபா, வாருங்கள் யமவனதிற்குப் போகும் பாதை இருக்கிறது . அது வழியாக போனால் கொஞ்சம் தூரத்தில் நீரோடையில் தண்ணீர் தேங்கி இருக்கும். கை கால் அலம்பியபின் நாம் சாப்பிடலாம்' என்று சொன்னார் . நானும் சரியென்று சொன்னேன் . அனைவரும் கிளம்பினோம். சுமார் பத்து நிமிடத்தில் அந்த இடத்தையும் அடைந்து விட்டோம் .
அங்கு உள்ள ஒரு மர நிழலில் சாப்பாட்டுக் கூடையை வைத்து விட்டு தண்ணீர் தேடினோம். ஊஹூம், தண்ணீர்? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அந்த ஓடையில் இல்லை . பாலு அதற்குள் அங்கு இருந்த காட்டு வாழைமரத்தின் இலைகளைப் பிடுங்கி வந்தார் . ஆளுக்கு ஒரு இலை எடுத்து எல்லோரும் வரிசையாக அமர்ந்தனர் . நாங்கள் கொண்டு வந்த உப்புமா எல்லோருக்கும் சரியாக இருந்தது . ஆனால் பிரதீபுக்குத்தான் உப்புமா போதவில்லை போலும்! ஆள் நெளிந்துகொண்டே இருந்தார் . அதை கவனித்த நான், ஸ்ரீநிவாசன் சார் கொண்டு வந்த ப்ரட் ஜாம் போன்றவற்றைக் கொடுத்து ஒரு வழியாக சமாளித்தேன் . இப்பொழுது பிரதீப் முகத்தில் சிறிது சிரிப்பு காணப்பட்டது. ஐயப்பன் இதை சொல்லியே என்னிடம் கிண்டல் அடித்துக் கொண்டு வந்தார் . அப்பொழுது ஒரு முக்கியமான விஷயத்தை சொன்னார் வழிகாட்டி பாலு. இந்த ஓடையை ஒட்டி இருக்கிற மலையில் இருக்கும் ஒரு வகையான மரங்கள் எல்லாம் அந்த காலத்தில் சித்தர் ரசவாதம் தயாரிக்கப் பயன்படுத்தினார்களாம். எனக்கு புரிந்தது. ஆனாலும் புரியாத மாதிரியே காட்டிக் கொண்டேன்.
பின் அந்த மரத்தின் இலைகளை பறித்து எங்கள் கைகளில் கொடுத்து, 'உங்கள் கைகளால் இந்த இலைகளைக் கசக்கித் தேய்த்துச் சாறு எடுங்கள்' என்றார். ஊஹூம். ஒருவர் கைகளில் கூடச் சாறு வரவில்லை ஆனால் பொன் நிறத்தில் ஒரு விதச் சாயம் எங்கள் கைகளில் ஒட்டியிருந்தது . பிறகுதான் சொன்னார், 'அக்காலத்தில் சித்தர்கள் தங்கம் தயாரிக்க பயன்படுத்திய மூலிகைகளில் இதுவும் ஒன்று' என்று! இந்த மரத்தின் இலைகளில் சாறு எடுப்பவன் சித்தன் ஆகிவிடுவான் என்று வேறு சொன்னார் . எங்களுக்கு தூக்கிவாரிப் போட்டது எவ்வளோ பெரிய விசயத்தை இவ்வளவு சாதாரணமா சொல்கிறீகளே . என்றேன் . அதற்கு வழிகாட்டி பாலு சிறிது கொண்டே சொன்னார், 'தங்கம் தயாரிக்கும் நோக்கத்துடன் இந்த மலைக்குள் வந்தாலே காவல் தெய்வங்கள் அவன் மனது அறிந்து அவனைக் காவு வாங்கி விடும் . அப்படி மீறி வந்தாலும் இந்த மலையின் இந்த மூலிகையில் சாறு எடுத்தால்தான் தங்கம் கிடைக்க வழியே கிடைக்கும் . இதில் சாறு எடுக்கும் ரகசியம் சித்தனுக்குதான் தெரியும். இந்த ஓடை இருக்கும் மலை முழுவது இந்த மூலிகைதான் இருக்கும். அதனால்தான் இதைத் தங்க மலை என்று தன் நானும் என் சகாக்களும் கூறுவோம். இந்த மலை பக்கம் யாரையும் கூட்டி வர மாட்டோம் ஆனால் இன்றைக்குச் சாப்பாட்டுக்காக இந்த மலைப் பக்கம் வர வேண்டியதாக ஆனது' என்று சொன்னார் . நான் அப்படியே அசந்து உக்காந்து விட்டேன்.
பின்னே என்ன? தங்கம் உள்ள மூலிகை என் கண் எதிரே ஆனால் அதை எப்படி செய்வது என்ற சூத்திரம் நான் வணக்கும் சித்தன் உள்ளே . என்ன ஒரு விந்தை? இந்த மூலிகையை பார்த்து விடமாட்டோமா என்று தவம் இருந்தவர்கள் எத்தனை பேர்? இந்த மூலிகையைத் தேடி வாழ்க்கையைத் தொலைத்தவர் எத்தனை பேர்? அதற்கு உயிரை கொடுத்தவர் எத்தனை பேர்? ஆனால் தங்கத்தைத் தன் காலடியில் போட்டு மிதித்தவர் இந்த மலையில் வாழும் சித்தர்கள். பின்னே, எங்கள் கண் எதிரே தங்கத்தை உருவாக்கும் மூலிகை ஒரு மலையைச் சுற்றி வளர்ந்து நிற்கிறது. அதை பார்க்கும் பாக்கியமாவது கிடைத்தது எங்களுக்கு. பின் அங்கிருந்துக் கிளம்பினோம் கிளம்பும் போது அனைவரும் ஒரே மாதிரியானக் காரியத்தை செய்தார்கள். அது என்னவென்றால், மூலிகை தேய்த்த கையைப் பார்த்ததுதான் . எங்கள் கைகள் பொன் நிறத்தில் எங்களை பார்த்துச் சிரித்தது .
எனது மனதிற்குள் சித்தனும் சிரித்தான் கடைசியில் நீயும் தங்கத்திற்கு ஆசைபடுபவனா என்று. நான் அப்பொழுது முடிவு எடுத்தேன். என் வாழ்க்கையில் தங்கம் தேவை இல்லை என்று .
பிறகு அனைவரும் திரும்பவும் தங்கமலையை விட்டு இடைக்காடர் வனம் வந்து சேர்ந்தோம் . அங்கிருந்து அப்படியே நான்கு கிலோ மீட்டர் நடந்தால் பெரியமகாலிங்கம் இருக்கும் இடத்தை அடைந்து விடலாம் . பிரதீப் மட்டும் ஆழ்ந்த யோசனையில் வந்தார். ஐயப்பன், 'என்ன பிரதீப்? தங்கம் தயாரிக்கலாமா? நீங்க சாறு எடுங்க, நான் தயாரிக்கிறேன்' என்று பிரதீபை காமெடி பண்ணினார் . பிரதீப், 'ஆமாம் ஐயப்பன். கஷ்டமான வேலையை எனக்குக் கொடுங்கள். ஈசியான வேலையை நீங்க எடுத்துக்குங்க'ன்னு சொன்னார் . நான் சிரித்துக் கொண்டே இவர்களைப் பின் தொடர்ந்தேன் . இப்பொழுது நாங்கள் மலையின் மேல் உச்சியில் சமதளத்தில் நடந்து கொண்டிருக்கிறோம். ஒரு இரண்டு கிலோ மீட்டர் நடந்திருப்போம் தீடீரென்று பாலு, வேறு பாதையில் பிரிந்து உள்ளே வேகமா சென்றார்
நாங்கள் ஒன்றும் புரியாமல் விழித்தோம். ஏன் என்றால் அது ஒற்றை அடிபாதை. அவ்வழியே செல்லச் சிரமமாக இருக்கும். சரி என்று ஒரு இரண்டு நிமிடம் நின்றோம் . மனிதர் கைகளில் அருநெல்லிக்கனிகளைக் கொண்டு வந்தார் .
அக்கனிகள் செந்நிறத்தில் இருந்தது எனக்கு சந்தேகம். நான் பாலுவை மர்மப் புன்னகையோடுப் பார்த்தேன். பாலு, எதுவும் சொல்ல வேண்டாம் என்றார் சைகையில். நான் புரிந்து கொண்டுவிட்டேன் . நமது நண்பர்கள் அனைவரும் நெல்லிக் கனி சுவையாக உள்ளது என்று சாப்பிட்டனர் . நானும் இரண்டு நெல்லிக்கனிகளைச் சாப்பிட்டேன் . அக்கனிகள் சாதாரணக் கனிகளா? அவை எவ்வளவு மருத்துவக் குணம் வாய்ந்தது என்று எனக்கும் நன்றாகவே தெரியும். நண்பர்களுக்கு அதாவது பிரதீப், ஐயப்பன், ஸ்ரீநிவாசன் சார் இவர்களுக்குத் தெரியாது அதன் மகிமை .
நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டேச் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி பெரிய மகாலிங்கத்தை அடைந்தோம் . ஆகா. அற்புதம் எம்பெருமான் வீற்று இருக்கும் அழகை காணக் கண் கோடி வேண்டும் . பெரிய மகாலிங்கத்தை அடைந்து சிறிது நேரம் இளைப்பாறினோம் . பின் பெரிய மகாலிங்கத்தைச் சுற்றி, அவ்விடத்தை எல்லோரும் சுத்தப்படுத்தினோம் .
பெரிய மகாலிங்கத்திடம் ஒரு சிறப்பு. தமிழ் நாட்டில் எந்த சிவன் ஆலயம் அல்லது விஷ்ணு ஆலயம் அல்லது எந்த கடவுள் வீற்றிருக்கும் ஆலயம் ஆனாலும் அங்கு அர்ச்சகரோ இல்லை பூசாரியோ இருப்பார் அல்லது அதற்கென்று நியமிக்கப் பட்டவர்கள் மட்டும்தான் பூஜை செய்ய முடியும் . ஆனால் எம்பெருமான் இந்த அடர்ந்த வனத்திற்குள் இருந்து கொண்டு, யார் வந்தாலும் தன்னை உள்ளன்போடு பூஜிக்கலாம் என்று கம்பீரமாக வீற்றிருக்கிறார் .
பெரிய மகாலிங்கத்தின் அடியில் சிறிய மகாலிங்கமும் அதற்கு நேர் எதிரே நந்தியும் உள்ளனர். அவர்களுக்கு அபிஷேகம் தீபாராதனை போன்றவைகளை நாமே செய்து கொள்ளலாம். பௌர்ணமி அமாவாசை நாட்களில் அங்கு ஒரு சாது இருந்து பூஜை செய்வார் . மற்ற நாட்களில் நாமே பூஜை செய்து கொள்ளலாம் . இதிலிருந்து நாம் கற்று கொள்வது . எம்பெருமான், ஏழை பணக்காரன் கீழ்ச்சாதி மேல்ச்சாதி என்ற பாகுபாடு இல்லாமல் உள்ளன்போடு யார் பூஜித்தாலும் ஏற்றுக் கொள்வார் .
நாங்கள் அனைவருமே கொண்டு வந்திருந்த அபிஷேகப் பொருட்களுடன் பக்கத்தில் இருந்து ஊற்று நீர் அபிஷேகத்திற்கு எடுத்து வந்து நியம முறைப்படி எல்லாம் பண்ணினோம் . சமஸ்கிருத மந்திரங்கள் தெரியவில்லை அதலால் தேவார திருவாசக பாடல்களையே பாடினோம் . இறைவனும் ஏற்று கொண்டார் என்றுதான் நினைக்கிறேன் . பூஜை முடித்து பிறகு நடக்கத் தொடங்கினோம் .
நடக்குமுன் பெரிய மகாலிங்கத்தை ஒருதரம் சுற்றி வந்தோம் . பெரிய மகாலிங்கத்தை ஒரு கற்பக விருட்சம் தன் வேர்களால் பிடித்து கொண்டிருக்கிறது
அதை பார்ப்பதற்கு இறைவன் ஜடா முடி தரித்து இருப்பது போலவும் அந்த வேர்கள் இறைவன் பின்னால் அவ்வளவு அழகாக ஒரு பெண்ணின் கூந்தலை போல் விரிந்தும் நிற்கிறது. மெய் சிலிர்த்து போனேன், அதைக் கண்டு. உண்மையில் இதை எல்லாம் காண ஒரு கொடுப்பினை வேண்டும் .
மாடி வீட்டு வாழ்க்கை, படுக்கச் சொகுசான இடம், மூன்றுவேளை அறுசுவை உணவு, கவனித்துக் கொள்ள எனது அன்புள்ள தாயார், எனக்கு ஒன்று என்றால் பதறித் துடிக்கும் எனது பெரியன்னை என்று சுற்றம் சூழ நான் இருக்கும்போது, அனல் அடர்ந்த வனத்தினுள் என் இறைவன் ஒருவரும் வேண்டாம் என்று தானே இருக்கிறான் . என்ன வசதி அவனுக்கு இருக்கிறது? இருப்பதையெல்லாம் நமக்கு ஈந்து விட்டு அவன் நடுக்காட்டினுள் இருப்பது எதை உணர்த்துவதற்கு? மனக் கண்ணைத் திறந்தவர்களுக்குதான் அது புரியும் அவன் ஏன் இப்படி ஒரு இடத்தில் குடி கொண்டுள்ளான் என்று
பெரிய மகாலிங்கம் தரிசனம் முடித்து விட்டு அனைவரும் அடுத்து நடுக்காட்டு நாகர் நடுக்காட்டு பிள்ளையார் வெள்ளைப்பிள்ளையார் ஆகியோரை பார்க்கக் கிளம்பினோம் . இதை நாம் அடுத்த இடுகையில் பார்க்கலாமே. ஒரு சிறிய தத்துவத்துடன் முடிக்கிறேன் . எனது நண்பர் ஒருவர் மெயிலில் எனக்கு அனுப்பிய தத்துவம் இது
உங்களால் பறக்க முடியவில்லையா ?
ஓடுங்கள் ...
உங்களால் ஓட முடியவில்லையா ?
நடங்கள் ...
உங்களால் நடக்க முடியவில்லையா ?
தவழுங்கள் ..
ஆனால், எதைச்செய்தாலும் உங்கள் இலக்கை நோக்கி
நகர்ந்து கொண்டே இருங்கள் ..
இனிய மாலை வணக்கம் .